குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...


பொருள்

11. நட்பியல்

87 : பகை மாட்சி

குறள் எண் : 861

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை

டாக்டர். மு.வ. உரை
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

டாக்டர் கலைஞர் உரை
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்பதைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.


குறள் எண் : 862

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

டாக்டர் கலைஞர் உரை
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?

சாலமன் பாப்பையா உரை
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?


குறள் எண் : 863

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

டாக்டர் கலைஞர் உரை
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.


குறள் எண் : 864

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

டாக்டர் கலைஞர் உரை
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.

சாலமன் பாப்பையா உரை
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.


குறள் எண் : 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனாவான்.

டாக்டர் கலைஞர் உரை
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் பழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.


குறள் எண் : 866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

டாக்டர் கலைஞர் உரை
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்பப்படும்.


குறள் எண் : 867

கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை

டாக்டர். மு.வ. உரை
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

டாக்டர் கலைஞர் உரை
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.


குறள் எண் : 868

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

டாக்டர் கலைஞர் உரை
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.


குறள் எண் : 869

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்

டாக்டர். மு.வ. உரை
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

டாக்டர் கலைஞர் உரை
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.


குறள் எண் : 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி

டாக்டர். மு.வ. உரை
கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

டாக்டர் கலைஞர் உரை
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை
நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோதும் புகழ் சேராது.


மேலே

அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்