திருக்குறளில் சீர்கள்
யாப்பிலக்கணத்தில், எழுத்து, அசை ஆகியவற்றிற்கு அடுத்ததாக, மூன்றாவதாக அமையும் உறுப்பு, சீர் என்பதாகும். செய்யுளில், எழுத்துக்கள் சேர்ந்து அசைகள் உருவாவது போல், அசைகள் சேர்ந்து சீர்கள் உருவாகின்றன. சீர்கள் என்பவை, சொற்களிலிருந்து வேறுபட்டவை. ஏனெனில், செய்யுளில் இடம்பெறும் ஒரு சீரானது, தனித்து நின்று பொருள் தரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. இதற்கு, கீழ்வரும் திருக்குறள், ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும்.
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இந்தக் குறளில், "வேண்டுதல்வேண்" என்பது முதல் சீராகவும், "டாமை" என்பது இரண்டாம் சீராகவும் அமைந்துள்ளதைக் காணமுடியும். இதிலிருந்து, சீர்களின் அமைப்பு, ஓசை நயத்தைப் பொறுத்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
சீர் வகைகள்
சீர்களை உருவாக்கும் அசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர் மற்றும் நாலசைச்சீர் என்று பொதுவாகப் பிரிக்கலாம். இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினாலும் குறிப்பிடப்படுவது உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் கண்டபடி வகைப்படுத்தலாம்.
சீர்கள் | வேறு பெயர்கள் | |
---|---|---|
ஓரசைச்சீர் | அசைச்சீர் | |
ஈரசைச்சீர் | இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர் | |
மூவசைச்சீர் | உரிச்சீர், வெண்சீர் | |
நாலசைச்சீர் | பொதுச்சீர் |
மேற்காணும் நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அசைகளின் வரிசை என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றன. ஓரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர்கள் பதினாறு விதமாகவும் அமைகின்றன. இவற்றுக்கான பெயர்கள் யாப்பிலக்கண நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 32 விதமான ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
ஓரசைச்சீர்கள்
அசைகள் | வாய்பாடு | |
---|---|---|
1. நேர் | நாள் | நா(ள்) |
2. நிரை | மலர் | மல(ர்) |
3. நேர்பு | காசு | கா|சு |
4. நிரைபு | பிறப்பு | பிற(ப்)பு |
ஈரசைச்சீர்கள்
அசைகள் | வாய்பாடு | |
---|---|---|
1. நேர்-நேர் | தேமா | தே|மா |
2. நிரை-நேர் | புளிமா | புளி|மா |
3. நிரை-நிரை | கருவிளம் | கரு|விள(ம்) |
4. நேர்-நிரை | கூவிளம் | கூ|விள(ம்) |
மூவசைச்சீர்கள்
அசைகள் | வாய்பாடு | |
---|---|---|
1. நேர்-நேர்-நேர் | தேமாங்காய் | தே|மா(ங்)காய் |
2. நேர்-நேர்-நிரை | தேமாங்கனி | தே|மா(ங்)கனி |
3. நிரை-நேர்-நேர் | புளிமாங்காய் | புளி|மா(ங்)காய் |
4. நிரை-நேர்-நிரை | புளிமாங்கனி | புளி|மா(ங்)கனி |
5. நிரை-நிரை-நேர் | கருவிளங்காய் | கரு|விள(ங்)காய் |
6. நிரை-நிரை-நிரை | கருவிளங்கனி | கரு|விள(ங்)கனி |
7. நேர்-நிரை-நேர் | கூவிளங்காய் | கூ|விள(ங்)காய் |
8. நேர்-நிரை-நிரை | கூவிளங்கனி | கூ|விள(ங்)கனி |
நாலசைச்சீர்கள்
அசைகள் | வாய்பாடு | |
---|---|---|
1. நேர்-நேர்-நேர்-நேர் | தேமாந்தண்பூ | தே|மா(ந்)த(ண்)பூ |
2. நேர்-நேர்-நேர்-நிரை | தேமாந்தண்ணிழல் | தே|மா(ந்)த(ண்)ணிழல் |
3. நேர்-நேர்-நிரை-நேர் | தேமாநறும்பூ | தே|மா|நறு(ம்)பூ |
4. நேர்-நேர்-நிரை-நிரை | தேமாநறுநிழல் | தே|மா|நறு|நிழல் |
5. நிரை-நேர்-நேர்-நேர் | புளிமாந்தண்பூ | புளி|மா(ந்)த(ண்)பூ |
6. நிரை-நேர்-நேர்-நிரை | புளிமாந்தண்ணிழல் | புளி.மாந்.தண்.ணிழல் |
7. நிரை-நேர்-நிரை-நேர் | புளிமாநறும்பூ | புளி.மா.நறும்.பூ |
8. நிரை-நேர்-நிரை-நிரை | புளிமாநறுநிழல் | புளி.மா.நறு.நிழல் |
9. நேர்-நிரை-நேர்-நேர் | கூவிளந்தண்பூ | கூ.விளந்.தண்.பூ |
10. நேர்-நிரை-நேர்-நிரை | கூவிளந்தண்ணிழல் | கூ.விளந்.தண்.ணிழல் |
11. நேர்-நிரை-நிரை-நேர் | கூவிளநறும்பூ | கூ.விள.நறும்.பூ |
12. நேர்-நிரை-நிரை-நிரை | கூவிளநறுநிழல் | கூ.விள.நறு.நிழல் |
13. நிரை-நிரை-நேர்-நேர் | கருவிளந்தண்பூ | கரு.விளந்.தண்.பூ |
14. நிரை-நிரை-நேர்-நிரை | கருவிளந்தண்ணிழல் | கரு.விளந்.தண்.ணிழல் |
15. நிரை-நிரை-நிரை-நேர் | கருவிளநறும்பூ | கரு.விள.நறும்.பூ |
16. நிரை-நிரை-நிரை-நிரை | கருவிளநறுநிழல் | கரு.விள.நறு.நிழல் |
செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன.
திருக்குறளில் பயின்றுவரும் சீர்கள்
- வெண்பாவுக்குரிய தேமா, புளிமா எனும் மாச்சீர்களும், கருவிளம், கூவிளம் எனும் விளச்சீர்களும் குறள்வெண்பாவில் பயின்றுவரும். இந்நான்கு ஈரசைச் சீர்களும், இயற்சீர்கள் எனப்படும்.
வெண்பாவுக்குரிய தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய் மற்றும் கூவிளங்காய் ஆகிய காய்ச்சீர்களும் பயின்றுவரும்.
- மூவசைச்சீரில் நேர் அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை காய்ச்சீர்கள் எனப்படும்.
வாய்ப்பாட்டின் இறுதியில் காய் என முடிவதால் காய்ச்சீர் எனப்படுகிறது.
இச்சீர் வெண்பாவுக்கு உரியதால் வெண்பாவுரிச்சீர் என்றும் வெண்சீர் என்றும் அழைக்கப்படுகிறது.
காய்ச்சீர் அமையும் வகைகள் - நேர்+நேர்+நேர் = தேமாங்காய்
- நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
- நிரை+நிரை+நேர் = கருவிளங்காய்
- நேர்+நிரை+நேர் = கூவிளங்காய்
- மூவசைச்சீரில் நேர் அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை காய்ச்சீர்கள் எனப்படும்.
- ஓரசைச் சீர்களான நாள், மலர், காசு மற்றும் பிறப்பு எனும் நால்வகைச் சீர்களும் குறள் வெண்பாவின் இறுதியடியின் ( இரண்டாவது அடியின் ) ஈற்றுச்சீராக வரும்.
காசு மற்றும் பிறப்பு - விளக்கம்
காசு என்ற வாய்பாட்டை,
கா | சு → நேர் + நேர் → தேமா என்றும்
பிறப்பு என்ற வாய்பாட்டை,
பிற ( ப் ) பு → நிரை + நேர் → புளி|மா என்றும் கொள்ளக்கூடாது. இவை, குற்றியலுகரங்களாக அமைந்திருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எடுத்துக்காட்டு
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இங்கே, ஈற்றுச்சீரான "உலகு" என்பது "நிரைபு" எனப்படும் ஓரசைச் சீராகும். அதற்கான வாய்பாடு "பிறப்பு" என்பதாகும்.