திருக்குறளில் தளைகள்
தளை - விளக்கம்
செய்யுளில் அருகருகே வரும் இரண்டு சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகிறது. அடுத்தடுத்த இரு சீர்களில், முதலில் வரும் சீர் "நிலைச்சீர்" எனப்படுகிறது. அதை அடுத்து வரும் சீர் "வருஞ்சீர்" என அழைக்கப்படுகிறது. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை, ஒவ்வொரு தளை மட்டுமே பெற்றிருக்கும். மற்ற சீர்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னும் பின்னுமாக இரண்டு தளைகள் அமைகின்றன.
தளைகளின் வகைகள்
- இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு, நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை ஆகியவற்றைப் பொறுத்தது. இதன் அடிப்படையில் தளைகள், ஏழு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை:
ஆசிரியத்தளை
1. நேரொன்றிய ஆசிரியத்தளை (மா முன் நேர்)
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
2. நிரையொன்றிய ஆசிரியத்தளை (விளம் முன் நிரை)
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை
வெண்டளை
3. இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விளம் முன் நேர்)
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
- வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
- வருஞ்சீர் இயற்சீராயின், சிறப்புடை இயற்சீர் வெண்டளை எனப்படும்.
- வருஞ்சீர் வெண்சீராயின், சிறப்பில் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
4. வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
- வருஞ்சீர் வெண்சீராயின், சிறப்புடை வெண்சீர் வெண்டளை எனப்படும்.
- வருஞ்சீர் வெண்சீர் தவிர்த்து வேறு சீராயின், சிறப்பில் வெண்சீர் வெண்டளை எனப்படும்.
5. கலித்தளை: (காய் முன் நிரை)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நிரை
- வருஞ்சீர் காய்ச்சீராயின், சிறப்புடைக் கலித்தளை எனப்படும்.
- வருஞ்சீர் இயற்சீர் அல்லது கனிச்சீராயின், சிறப்பில் கலித்தளை எனப்படும்.
வஞ்சித்தளை
6. ஒன்றிய வஞ்சித்தளை (கனி முன் நிரை)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை
- வருஞ்சீர் கனிச்சீராயின், சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
- வருஞ்சீர் கனிச்சீர் தவிர்த்து வேறு சீராயின், சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
7. ஒன்றாத வஞ்சித்தளை (கனி முன் நேர்)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நேர்
- வருஞ்சீர் கனிச்சீராயின், சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.
- வருஞ்சீர் கனிச்சீர் தவிர்ந்த வேறு சீராயின், சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.
குறள் வெண்பாவுக்குரிய தளைகள்
வெண்பாவிற்குரிய தளைகளான இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் குறள் வெண்பாவிற்கான தளைகளாகும். இவ்விரு தளைகளும், திருக்குறளில் பயின்றுவருவதை, எடுத்துக்காட்டுடன் காண்போம்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
மேற்காணும் குறளை, கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.
நிலைச்சீர் | வருஞ்சீர் | தளையின் வகை |
---|---|---|
முகநக முக | நக நிரை | நிரை கருவிளம் | நட்பது ந(ட்)பது நேர் | நிரை கூவிளம் | இயற்சீர் வெண்டளை |
நட்பது ந(ட்)பது நேர் | நிரை கூவிளம் | நட்பன்று ந(ட்)ப(ன்)று நேர் | நேர் | நேர் தேமாங்காய் | இயற்சீர் வெண்டளை |
நட்பன்று ந(ட்)ப(ன்)று நேர் | நேர் | நேர் தேமாங்காய் | நெஞ்சத் நெ(ஞ்)சத் நேர் | நேர் தேமா | வெண்சீர் வெண்டளை |
நெஞ்சத் நெ(ஞ்)சத் நேர் | நேர் தேமா | தகநக தக | நக நிரை | நிரை கருவிளம் | இயற்சீர் வெண்டளை |
தகநக தக | நக நிரை | நிரை கருவிளம் | நட்பது ந(ட்)பது நேர் | நிரை கூவிளம் | இயற்சீர் வெண்டளை |
நட்பது ந(ட்)பது நேர் | நிரை கூவிளம் | நட்பு ந(ட்)பு நேர்பு காசு | இயற்சீர் வெண்டளை |
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
மேற்காணும் குறளில், முதல் இரு சீர்கள் எவ்வாறு தளைகின்றன என்று காண்போம்.
நிலைச்சீர் | வருஞ்சீர் |
---|---|
நன்மையும் தேமாங்காய் | தீமையும் நேர் | நேர் | நேர் தேமாங்காய் |
நிலைச்சீர் காய்ச்சீராகவும், வருஞ்சீரின் முதல் அசை நேரசையாகவும் உள்ளதால், வெண்சீர் வெண்டளை ஆகும். மேலும், வருஞ்சீரும் காய்ச்சீரானதால், சிறப்புடை வெண்சீர் வெண்டளையாகவும் உள்ளது.
உங்கள் கருத்து
ஆதிகேசவன் | 13 Jan, 2025,9:46 pm |
தளை என்றால் விலங்கு என்ற பொருள் உள்ளது. |