குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...

திருக்குறளில் எதுகை அழகு

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

-தொல்காப்பியம்-

  • எழுத்து, அசை, சீர், தளை, அடி மற்றும் தொடை ஆகிய ஆறும் யாப்பின் உறுப்புகளாகும்.
  • யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகையில், எதுகை அமையப்பெறின் எதுகைத்தொடை எனவும், மோனை அமையப்பெறின் மோனைத்தொடை எனவும் வழங்கப்படுகிறது.
  • வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படும். இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை எனப்படும்.

எதுகை வகைகள்

எதுகையை அடியெதுகை, சீரெதுகை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அடியெதுகை

வெவ்வேறு அடிகளின் இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் அடியெதுகை ( அடி எதுகை ) எனப்படும்.
புலவர்கள் பெரும்பாலும் தங்கள் செய்யுள்களில், அடியெதுகையை அதிகமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான அடிகளைக்கொண்ட செய்யுள்களில் அடியெதுகைதானே அழகைக் கூட்டும்.

எடுத்துக்காட்டு

நாகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
கச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
கத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

- திருவாசகம் -

எனும் திருவாசகச் செய்யுளில் அமையப்பெற்றுள்ள அடியெதுகையை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.
ஆனால், இரண்டே அடிகளையுடைய குறள் வெண்பாக்களில் அடியெதுகை சிறப்பாக ஆளப்பட்டுள்ளதை, வள்ளுவரின் நூல் முழுதும் நம்மால் காணமுடியும். திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் முதல் எட்டு செய்யுள்களிலும் அடியெதுகை அமையப்பெற்றுள்ளது.
எடுத்துக்காட்டுக்கள் :

ர முதல எழுத்தெல்லாம் ஆதி
வன் முதற்றே உலகு

( குறள் : 1 )

வாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிவாழி நீந்தல் அரிது

( குறள் : 8 )

சீரெதுகை

ஒரே அடியின் வெவ்வேறு சீர்களின் இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் சீரெதுகை ( சீர் எதுகை ) எனப்படும்.
சீரெதுகை ஏழு வகைப்படும். அவை,

  1. இணை எதுகை
  2. பொழிப்பு எதுகை
  3. ஒரூஉ எதுகை
  4. கூழை எதுகை
  5. மேற்கதுவாய்
  6. கீழ்க்கதுவாய்
  7. முற்று எதுகை

என்பனவாகும். ஏழு வகைச் சீரெதுகைகளையும் எடுத்துக்காட்டுடன் விளக்கும்பொழுது, அவற்றுக்குரிய இலக்கணங்களை எளிதாக அறிந்துகொள்ளவும், மனதிலிருத்தவும் முடியும்.

1. இணை எதுகை ( 1, 2 )

முதல் சீரும் இரண்டாம் சீரும் மட்டும் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

ண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

( இடனறிதல் - குறள் : 494 )

2. பொழிப்பு எதுகை ( 1, 3 )

முதல் சீரும் மூன்றாம் சீரும் மட்டும் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

ண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்

( கண்ணோட்டம் - குறள் : 575 )

3. ஒரூஉ எதுகை ( 1, 4 )

முதல் சீரும் நான்காம் சீரும் மட்டும் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

பெக்கண்டு நஞ்சுண் டமைவர் நத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

( கண்ணோட்டம் - குறள் : 580 )

4. கூழை எதுகை ( 1, 2, 3 )

நான்காம் சீர் தவிர, முதல் மூன்று சீர்கள் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை

( சான்றாண்மை - குறள் : 990 )

5. மேற்கதுவாய் எதுகை ( 1, 3, 4 )

இரண்டாம் சீர் தவிர, மற்ற மூன்று சீர்கள் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

ற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

( கல்வி - குறள் : 391 )

6. கீழ்க்கதுவாய் எதுகை ( 1, 2, 4 )

மூன்றாம் சீர் தவிர, மற்ற மூன்று சீர்கள் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

ழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

( ஒழுக்கமுடைமை - குறள் : 131 )

7. முற்று எதுகை ( 1, 2, 3, 4 )

நான்கு சீர்களும் எதுகையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

தீவை தீத்தலால் தீவை
தீயினும் அஞ்சப் படும்

( தீவினையச்சம் - குறள் : 202 )


குறிப்பு : எவ்வகைச் சீர் எதுகை ஆயினும், முதற் சீருடன் பொருந்தி அமைதல் வேண்டும். இதே இலக்கணம், சீர் மோனைகளுக்கும் பொருந்தும்.


மோனை வகைகள்

மோனையை அடி மோனை, சீர் மோனை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அடி மோனை

அடுத்தடுத்த அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்துவருதல் அடி மோனை எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள் :

ம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
ந்தம் வினையான் வரும்

( மக்கட்பேறு - குறள் : 63 )

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

( தீவினையச்சம் - குறள் : 202 )

சீர் மோனை

ஒரே அடியின் வெவ்வேறு சீர்களின் இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் சீர்மோனை ( சீர் மோனை ) எனப்படும்.
சீர்மோனை ஏழு வகைப்படும். அவை,

  1. இணை மோனை
  2. பொழிப்பு மோனை
  3. ஒரூஉ மோனை
  4. கூழை மோனை
  5. மேற்கதுவாய் மோனை
  6. கீழ்க்கதுவாய் மோனை
  7. முற்று மோனை

என்பனவாகும். ஏழு வகைச் சீர்மோனைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.

1. இணை மோனை ( 1, 2 )

முதல் சீரும் இரண்டாம் சீரும் மட்டும் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

றவாழி ந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

( கடவுள் வாழ்த்து - குறள் : 8 )

2. பொழிப்பு மோனை ( 1, 3 )

முதல் சீரும் மூன்றாம் சீரும் மட்டும் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

( கடவுள் வாழ்த்து - குறள் : 6 )

3. ஒரூஉ மோனை ( 1, 4 )

முதல் சீரும் நான்காம் சீரும் மட்டும் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

( நீத்தார் பெருமை - குறள் : 28 )

4. கூழை மோனை ( 1, 2, 3 )

நான்காம் சீர் தவிர, முதல் மூன்று சீர்கள் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

( கேள்வி - குறள் : 411 )

5. மேற்கதுவாய் மோனை ( 1, 3, 4 )

இரண்டாம் சீர் தவிர, மற்ற மூன்று சீர்கள் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

( வான்சிறப்பு - குறள் : 13 )

6. கீழ்க்கதுவாய் மோனை ( 1, 2, 4 )

மூன்றாம் சீர் தவிர, மற்ற மூன்று சீர்கள் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

ருள்சேர் ருவினையும் சேரா றைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

( கடவுள் வாழ்த்து - குறள் : 5 )

7. முற்று மோனை ( 1, 2, 3, 4 )

நான்கு சீர்களும் மோனையோடிருக்கும்.

எடுத்துக்காட்டு :

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

( வான்சிறப்பு - குறள் : 12 )


மேலே

உங்கள் கருத்து


A.Loganathan4 Dec, 2024,7:27 pm
அருமை.
அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்