குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...

நேரசையும் நிரையசையும்

  • யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும்.
  • செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பு அசை எனக் கூறப்படுகிறது.
  • பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வதே அசை என்று புரிந்துகொள்ளலாம்.
  • அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.
  • அசைகள், பொருளோடோ பொருளற்றோ இருக்கும்.

அசை நேர், நிரை என இரண்டு வகைப்படும். தொல்காப்பியத்தில் நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்கு அசைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்துக்குப் பின் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய யாப்பருங்கலத்திலும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையிலும் நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

நேரசை ( நேர்+அசை )

நேரசை என்பது கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு குறிப்பின்படி அமைந்திருக்கும்.

  1. ஒரு குறில் எடுத்துக்காட்டு : அ, க, ஞ
  2. குறில்+ஒற்று எடுத்துக்காட்டு : அக், நட், கண்
  3. ஒரு நெடில் எடுத்துக்காட்டு : பா, மா, டா
  4. நெடில்+ஒற்று எடுத்துக்காட்டு : பால், மான், டாம்
குறிப்பு : ஒற்றெழுத்து நீங்கலாக, இரண்டு மாத்திரைகளுக்கு மிகாமல் இருக்கும்.

நிரையசை ( நிரை+அசை )

நிரையசை என்பது கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு குறிப்பின்படி அமைந்திருக்கும்.

  1. இரு குறில் எடுத்துக்காட்டு : பசு, ஒலி, கிற
  2. இரு குறில்+ஒற்று எடுத்துக்காட்டு : அகம், படுக்
  3. ஒரு குறிலொடு ஒரு நெடில் எடுத்துக்காட்டு : படா, விழா
  4. குறில்+நெடில்+ஒற்று எடுத்துக்காட்டு : விடான், பலாக்
குறிப்பு : ஒற்றெழுத்து நீங்கலாக, இரண்டு மாத்திரைகளுக்குக் குறையாமலும், மூன்று மாத்திரைகளுக்கு மிகாமலும் இருக்கும்.

அசை பிரித்தல்

ஒரு சொல் அல்லது சீரை, அசைகளாகப் பிரிப்பதற்கு, எளிமையான மூன்று வித முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

சொல் அல்லது சீரின் ஒற்றெழுத்துக்களை அசையின் எல்லைகளாகக் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு : வணக்கம் → வண(க்)க(ம்)
இவ்வாறு பிரித்தபின், ஒரேயொரு எழுத்தைக் கொண்ட பகுதியை நேரசை என்றும், இரு எழுத்துக்களைக் கொண்ட பகுதியை நிரையசை என்றும் குறிக்க வேண்டும். ( அதாவது, "வண" என்பது நிரையசை; "க" என்பது நேரசை; )
இங்கே, வணக்கம் என்ற சொல், நிரை+நேர் என்ற அமைப்பில் உள்ளது.
நெட்டெழுத்துக்களை எல்லைகளாகக் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு : ஆடு → ஆ|டு → நேர்+நேர் என்ற அமைப்பில் உள்ளது.
எடுத்துக்காட்டு : ஆடுக → ஆ|டுக → நேர்+நிரை என்ற அமைப்பில் உள்ளது.
எடுத்துக்காட்டு : விடாது → விடா|து → நிரை+நேர் என்ற அமைப்பில் உள்ளது.
மேலே சொல்லப்பட்ட இரண்டு முறைகளையும் பயன்படுத்துதல்.
எடுத்துக்காட்டு : வணங்காது → வண(ங்)கா|து → நிரை+நேர்+நேர் என்ற அமைப்பில் உள்ளது.
முதல் இரு குறில்களை எல்லைகளாகக் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு : கனவு → கன|வு → நிரை+நேர் என்ற அமைப்பில் உள்ளது.
மேலும், க|னவு என்று பிரிக்க முற்படுவது பிழையாகும்.
மேலே சொல்லப்பட்ட எல்லா முறைகளையும் பயன்படுத்துதல்.
எடுத்துக்காட்டுஎழுதிடத்தானே
முதல் படி எழுதிட(த்)தானே
இரண்டாம் படி எழுதிட(த்)தா|னே
மூன்றாம் படி எழு|திட(த்)தா|னே
விடைநிரை+நிரை+நேர்+நேர் ( குறிப்பு : இது போன்ற நான்கு அசைகளைக்கொண்ட சீர்,
திருக்குறளில் அதாவது, குறள் வெண்பாவில் இடம் பெறாது. )

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

மேலே காணப்படும் குறள் வெண்பாவை எவ்வாறு அசைகளாகப் பிரிப்பதென்பதைக் காணலாம்.

ந(ன்)மையு(ம்) தீமையு(ம்) நாடி நல(ம்)புரி(ந்)த
த(ன்)மையா(ன்) ஆள(ப்) படு(ம்)
--→ ஒற்றெழுத்துக்கள் நீக்கப்பட்டன.

ந(ன்)மை|யு(ம்) தீ|மை|யு(ம்) நா|டி நல(ம்)புரி(ந்)த
த(ன்)மை|யா(ன்) ஆ|ள(ப்) படு(ம்)
--→ நெட்டெழுத்துக்கள் எல்லைகளாக்கப்பட்டன.

கொடுக்கப்பட்ட குறள் வெண்பாவின் ஏழு சீர்களிலும் அமைந்துவரும் அசைகளை, கீழ்க்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்.

ந(ன்)மை|யு(ம்)நேர்+நேர்+நேர்
தீ|மை|யு(ம்)நேர்+நேர்+நேர்
நா|டிநேர்+நேர்
நல(ம்)புரி(ந்)தநிரை+நிரை+நேர்
த(ன்)மை|யா(ன்)நேர்+நேர்+நேர்
ஆ|ள(ப்)நேர்+நேர்
படு(ம்)நிரை

மேலே

உங்கள் கருத்து


அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்