குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...

திருக்குறள் : முன்னுரை

திருக்குறள், தமிழ் மொழியின் தொன்மையான ஓர் அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளைக் கொண்டது.

அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலான திருக்குறள், மற்ற உயிரினங்களைவிட, உயரிய அல்லது சிறப்பான அல்லது ஆபத்தான பகுத்தறிவைப் பெற்றுள்ள இந்த மனிதக்கூட்டம், தம் அகவாழ்விலும் சமூகமாகக் கூடி வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். திருவள்ளுவரின் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. எனினும், தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளபடி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு, கி.மு. 31 ஆகும்.

இந்தியத் தத்துவவியலில், பகுத்தறிவின் வழியான மிகப் பழமையான படைப்புகளில் முதன்மையானதாகக் கருதப்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அன்புடைமையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல், மனித இனத்துக்கான அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா செய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இவற்றோடு ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும் நட்பு, காதல், மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சமூகத்தில் நிலவிய பயனற்ற மன வேற்றுமைகளைக் களையவும், தீமைகளை இடித்துரைக்கவும் செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.

இயற்கையையும், மக்களையும் விரும்பி அரவணைத்த அறிஞர் பெருமக்களான இளங்கோவடிகள், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, காரல் கிரவுல், ஜி. யு. போப், அலெக்சாந்தர் பியாதிகோர்ஸ்கி மற்றும் யூ ஹ்சி போன்றோர், திருக்குறளின் பெருமைகளைத் தங்கள் சிந்தனைகளில் வெளிப்படுத்தியுள்ளதிலிருந்தே, திருக்குறளின் பெருமை இன்னதென்று நாம் உணர முடியும்.

தமிழ் இலக்கியங்களில் மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்படக்கூடிய நூலாகவும் திருக்குறள் திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812-ம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது. திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பாகவும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

உலகின் அனைத்து அறங்களையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழங்கும் திருக்குறளைப் போற்றிப்பாதுகாப்பதை, தமிழ் மக்களும் தமிழ்நாடு அரசும் தங்கள் வாழ்வியல் கடமையாகக் கொண்டுள்ளனர். அவ்வாறான மன வேட்கையின் வெளிப்பாடே "குறள் மணிமாலை" எனும் இந்த இணையதளம் ஆகும்.

அன்புடன்
தே.சிவகுமார்.

நன்றிகள்
ஆசிரியப் பெருமக்கள் ( 1977 - 1982 )
தூய அந்தோணியார் தொடக்கப் பள்ளி, நாகப்பட்டிணம்.
திருமதி. அன்னம்மாள்
திருமதி. கமலியம்மாள்
திருமதி. ஃபாத்திமா
திரு. கோவிந்தராஜு


ஆசிரியப் பெருமக்கள் ( 1982 - 1987 )
தேசிய மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டிணம்.
திரு. அமீர்
திரு. ம. சுப்ரமணியன்
திரு. சி. தமிழ்ச்செல்வன்
திரு. விஸ்வநாதன்
திரு. வி. தியாகராஜன் ( அறிவியல் )
திரு. விஸ்வநாதன் ( அறிவியல் )
திரு. சிவப்பிரகாசம் ( கணிதம் )


மற்றும், இனிய நண்பன்
அப்துல் வஹாப் ஷாஹுல் ஹமீத், பாப்பாவூர்.


மேலே

உங்கள் கருத்து


Mahalingam4 Dec, 2024,8:41 pm
Simply Super.
Aswin15 Nov, 2024,8:27 pm
நன்றாக உள்ளது. keep it up.
அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்