குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...


பொருள்

5. அரசியல்

41 : கல்லாமை

குறள் எண் : 401

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

டாக்டர். மு.வ. உரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

டாக்டர் கலைஞர் உரை
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.


குறள் எண் : 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

டாக்டர். மு.வ. உரை
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

டாக்டர் கலைஞர் உரை
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.


குறள் எண் : 403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

டாக்டர். மு.வ. உரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

டாக்டர் கலைஞர் உரை
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.


குறள் எண் : 404

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்

டாக்டர். மு.வ. உரை
கல்லாதவனுடைய அறிவு ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

டாக்டர் கலைஞர் உரை
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.


குறள் எண் : 405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

டாக்டர். மு.வ. உரை
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம் ) கூடிபேசும் போது அப்பேச்சினால் கெடும்.

டாக்டர் கலைஞர் உரை
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.


குறள் எண் : 406

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

டாக்டர். மு.வ. உரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

டாக்டர் கலைஞர் உரை
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.


குறள் எண் : 407

நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று

டாக்டர். மு.வ. உரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

டாக்டர் கலைஞர் உரை
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.


குறள் எண் : 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

டாக்டர். மு.வ. உரை
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

டாக்டர் கலைஞர் உரை
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.


குறள் எண் : 409

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு

டாக்டர். மு.வ. உரை
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

டாக்டர் கலைஞர் உரை
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.


குறள் எண் : 410

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

டாக்டர். மு.வ. உரை
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

டாக்டர் கலைஞர் உரை
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

சாலமன் பாப்பையா உரை
விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.


மேலே

அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்