அறம்
3. துறவறவியல்
27 : தவம்
குறள் எண் : 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
டாக்டர். மு.வ. உரை
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.
டாக்டர் கலைஞர் உரை
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும்.
சாலமன் பாப்பையா உரை
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.
குறள் எண் : 262
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
டாக்டர். மு.வ. உரை
தவக்கோலம் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
டாக்டர் கலைஞர் உரை
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.
சாலமன் பாப்பையா உரை
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.
குறள் எண் : 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்
டாக்டர். மு.வ. உரை
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?
டாக்டர் கலைஞர் உரை
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை
துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.
குறள் எண் : 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
டாக்டர். மு.வ. உரை
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
டாக்டர் கலைஞர் உரை
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
சாலமன் பாப்பையா உரை
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.
குறள் எண் : 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
டாக்டர். மு.வ. உரை
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
டாக்டர் கலைஞர் உரை
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
குறள் எண் : 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
டாக்டர். மு.வ. உரை
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
டாக்டர் கலைஞர் உரை
அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.
சாலமன் பாப்பையா உரை
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.
குறள் எண் : 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
டாக்டர். மு.வ. உரை
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
டாக்டர் கலைஞர் உரை
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.
குறள் எண் : 268
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
டாக்டர். மு.வ. உரை
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
டாக்டர் கலைஞர் உரை
"தனது உயிர்" என்கிற பற்றும், "தான்" என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
சாலமன் பாப்பையா உரை
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
குறள் எண் : 269
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
டாக்டர். மு.வ. உரை
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு ( ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
டாக்டர் கலைஞர் உரை
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
குறள் எண் : 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
டாக்டர். மு.வ. உரை
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
டாக்டர் கலைஞர் உரை
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.