பொருள்
11. நட்பியல்
83 : கூடா நட்பு
குறள் எண் : 821
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
டாக்டர். மு.வ. உரை
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
டாக்டர் கலைஞர் உரை
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
குறள் எண் : 822
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
டாக்டர். மு.வ. உரை
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
டாக்டர் கலைஞர் உரை
உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.
குறள் எண் : 823
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது
டாக்டர். மு.வ. உரை
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
டாக்டர் கலைஞர் உரை
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
சாலமன் பாப்பையா உரை
மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
குறள் எண் : 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
டாக்டர். மு.வ. உரை
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
டாக்டர் கலைஞர் உரை
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
குறள் எண் : 825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று
டாக்டர். மு.வ. உரை
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
டாக்டர் கலைஞர் உரை
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.
சாலமன் பாப்பையா உரை
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
குறள் எண் : 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
டாக்டர். மு.வ. உரை
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
டாக்டர் கலைஞர் உரை
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
சாலமன் பாப்பையா உரை
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
குறள் எண் : 827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
டாக்டர். மு.வ. உரை
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
டாக்டர் கலைஞர் உரை
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
குறள் எண் : 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
டாக்டர். மு.வ. உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
டாக்டர் கலைஞர் உரை
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
சாலமன் பாப்பையா உரை
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
குறள் எண் : 829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
டாக்டர். மு.வ. உரை
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
டாக்டர் கலைஞர் உரை
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
குறள் எண் : 830
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்
டாக்டர். மு.வ. உரை
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
டாக்டர் கலைஞர் உரை
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.