குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...


அறம்

3. துறவறவியல்

28 : கூடா ஒழுக்கம்

குறள் எண் : 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

டாக்டர். மு.வ. உரை
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

டாக்டர் கலைஞர் உரை
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா உரை
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.


குறள் எண் : 272

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்

டாக்டர். மு.வ. உரை
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?

டாக்டர் கலைஞர் உரை
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?


குறள் எண் : 273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

டாக்டர். மு.வ. உரை
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

டாக்டர் கலைஞர் உரை
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.


குறள் எண் : 274

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

டாக்டர். மு.வ. உரை
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

டாக்டர் கலைஞர் உரை
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.


குறள் எண் : 275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்

டாக்டர். மு.வ. உரை
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

டாக்டர் கலைஞர் உரை
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.


குறள் எண் : 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்

டாக்டர். மு.வ. உரை
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

டாக்டர் கலைஞர் உரை
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.


குறள் எண் : 277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து

டாக்டர். மு.வ. உரை
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

டாக்டர் கலைஞர் உரை
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.


குறள் எண் : 278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

டாக்டர். மு.வ. உரை
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

டாக்டர் கலைஞர் உரை
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.

சாலமன் பாப்பையா உரை
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.


குறள் எண் : 279

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

டாக்டர். மு.வ. உரை
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் கலைஞர் உரை
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.


குறள் எண் : 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

டாக்டர். மு.வ. உரை
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

டாக்டர் கலைஞர் உரை
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.


மேலே

அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்