பொருள்
11. குடியியல்
106 : இரவு
குறள் எண் : 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
டாக்டர். மு.வ. உரை
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
டாக்டர் கலைஞர் உரை
கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.
சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிறதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.
குறள் எண் : 1052
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
டாக்டர். மு.வ. உரை
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
டாக்டர் கலைஞர் உரை
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
குறள் எண் : 1053
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
டாக்டர். மு.வ. உரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
டாக்டர் கலைஞர் உரை
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.
குறள் எண் : 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
டாக்டர். மு.வ. உரை
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
டாக்டர் கலைஞர் உரை
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
குறள் எண் : 1055
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது
டாக்டர். மு.வ. உரை
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
டாக்டர் கலைஞர் உரை
உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.
சாலமன் பாப்பையா உரை
கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.
குறள் எண் : 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்
டாக்டர். மு.வ. உரை
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
டாக்டர் கலைஞர் உரை
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.
சாலமன் பாப்பையா உரை
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
குறள் எண் : 1057
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து
டாக்டர். மு.வ. உரை
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
டாக்டர் கலைஞர் உரை
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
சாலமன் பாப்பையா உரை
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.
குறள் எண் : 1058
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
டாக்டர். மு.வ. உரை
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
டாக்டர் கலைஞர் உரை
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.
குறள் எண் : 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
டாக்டர். மு.வ. உரை
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
டாக்டர் கலைஞர் உரை
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
குறள் எண் : 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
டாக்டர். மு.வ. உரை
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
டாக்டர் கலைஞர் உரை
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.
சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.