பொருள்
5. அரசியல்
43 : அறிவுடைமை
குறள் எண் : 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
டாக்டர். மு.வ. உரை
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
டாக்டர் கலைஞர் உரை
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
சாலமன் பாப்பையா உரை
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
குறள் எண் : 422
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
டாக்டர். மு.வ. உரை
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
டாக்டர் கலைஞர் உரை
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
குறள் எண் : 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
டாக்டர். மு.வ. உரை
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
டாக்டர் கலைஞர் உரை
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்,
சாலமன் பாப்பையா உரை
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
குறள் எண் : 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
டாக்டர். மு.வ. உரை
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
டாக்டர் கலைஞர் உரை
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
குறள் எண் : 425
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
டாக்டர். மு.வ. உரை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
டாக்டர் கலைஞர் உரை
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது, எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
குறள் எண் : 426
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
டாக்டர். மு.வ. உரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
டாக்டர் கலைஞர் உரை
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
குறள் எண் : 427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
டாக்டர். மு.வ. உரை
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
டாக்டர் கலைஞர் உரை
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
குறள் எண் : 428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
டாக்டர். மு.வ. உரை
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
டாக்டர் கலைஞர் உரை
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள், அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
குறள் எண் : 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
டாக்டர். மு.வ. உரை
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
டாக்டர் கலைஞர் உரை
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
சாலமன் பாப்பையா உரை
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
குறள் எண் : 430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
டாக்டர். மு.வ. உரை
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
டாக்டர் கலைஞர் உரை
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.