குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...


அறம்

1. பாயிரவியல்

4 : அறன் வலியுறுத்தல்

குறள் எண் : 31

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

டாக்டர். மு.வ. உரை
அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

டாக்டர் கலைஞர் உரை
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

சாலமன் பாப்பையா உரை
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?


குறள் எண் : 32

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

டாக்டர். மு.வ. உரை
ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை; அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

டாக்டர் கலைஞர் உரை
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

சாலமன் பாப்பையா உரை
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.


குறள் எண் : 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

டாக்டர். மு.வ. உரை
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

டாக்டர் கலைஞர் உரை
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.


குறள் எண் : 34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

டாக்டர் கலைஞர் உரை
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.


குறள் எண் : 35

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

டாக்டர். மு.வ. உரை
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் களைந்து ஒழுகுவதே அறமாகும்.

டாக்டர் கலைஞர் உரை
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.


குறள் எண் : 36

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

டாக்டர். மு.வ. உரை
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

டாக்டர் கலைஞர் உரை
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது, தான் அழியாமல் நமக்குத் துணை ஆகும்.


குறள் எண் : 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

டாக்டர். மு.வ. உரை
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

டாக்டர் கலைஞர் உரை
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.


குறள் எண் : 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

டாக்டர் கலைஞர் உரை
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.


குறள் எண் : 39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

டாக்டர். மு.வ. உரை
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

டாக்டர் கலைஞர் உரை
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

சாலமன் பாப்பையா உரை
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.


குறள் எண் : 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

டாக்டர். மு.வ. உரை
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

டாக்டர் கலைஞர் உரை
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.


மேலே

அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்