குறள் மணிமாலை

https://kuralmanimaalai.in

திருக்குறள்-பொதுமறை

குறள் தேடல்...


அறம்

2. இல்லறவியல்

8 : அன்புடைமை

குறள் எண் : 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

டாக்டர். மு.வ. உரை
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

டாக்டர் கலைஞர் உரை
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.


குறள் எண் : 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

டாக்டர். மு.வ. உரை
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்; அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

டாக்டர் கலைஞர் உரை
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.


குறள் எண் : 73

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

டாக்டர். மு.வ. உரை
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

டாக்டர் கலைஞர் உரை
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.


குறள் எண் : 74

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

டாக்டர். மு.வ. உரை
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

டாக்டர் கலைஞர் உரை
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

சாலமன் பாப்பையா உரை
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும். சிறப்பையும் உண்டாக்கும்.


குறள் எண் : 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

டாக்டர். மு.வ. உரை
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

டாக்டர் கலைஞர் உரை
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.


குறள் எண் : 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

டாக்டர். மு.வ. உரை
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

டாக்டர் கலைஞர் உரை
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.


குறள் எண் : 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

டாக்டர். மு.வ. உரை
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

டாக்டர் கலைஞர் உரை
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொல்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.


குறள் எண் : 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

டாக்டர். மு.வ. உரை
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை, வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

டாக்டர் கலைஞர் உரை
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.


குறள் எண் : 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

டாக்டர். மு.வ. உரை
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

டாக்டர் கலைஞர் உரை
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

சாலமன் பாப்பையா உரை
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?


குறள் எண் : 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

டாக்டர். மு.வ. உரை
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

டாக்டர் கலைஞர் உரை
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.


மேலே

அதிகாரம் எண்
முதற்சொல்
இறுதிச்சொல்